search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் வானிலை மையம்"

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு 3 நாட்கள் தாமதமாக ஜூன் 4-ந்தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் முதல் நாளில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்.

    இந்திய வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும் என்பது குறித்த முன் அறிவிப்புகளை வெளியிடும். இதுவரை இந்திய வானிலை ஆய்வு மையம் இதுபற்றி தகவல் வெளியிடாத நிலையில் தனியார் வானிலை ஆய்வு மையமான ஸ்கைமெட் நிறுவனம் கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 4-ந்தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

    இந்நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஜதின்சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கேரளாவில் வழக்கமாக ஜூன் 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை ஆரம்பமாகும். அதன் பிறகு ஜூலை மத்தியில் நாடு முழுவதும் பெய்யத் தொடங்கும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 3 நாட்கள் தாமதமாக ஜூன் 4-ந்தேதி தொடங்கும்.

    தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி வருகிற 22-ந்தேதி அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் தென்படும். இந்திய தீபகற்ப பகுதியில் பருவமழை மெதுவாகவே தொடங்கும்.

    இந்த ஆண்டு இந்தியாவின் வடகிழக்கு, கிழக்கு மற்றும் மத்தியில் உள்ள மாநிலங்களில், தென்மாநிலங்களை விட குறைவான அளவே மழை பெய்ய வாய்ப்புள்ளது.



    இந்தியாவில் சராசரியாக பெய்யும் மழையில் 96 சதவீத அளவு மழை வடமேற்கு பகுதியில் பெய்யும். ஆந்திராவின் ராயலசீமா மற்றும் கர்நாடகாவின் உள் பகுதியில் குறைந்த அளவே மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    கேரளா மற்றும் கர்நாடகாவின் கடலோர பகுதிகளில் இந்த ஆண்டு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்யும்போது குமரி மாவட்டத்திலும் அதிக மழை பொழிவு இருக்கும். இதுபோல மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால் குமரி மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கும்.

    மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமாக திகழும் முல்லை பெரியாறு அணைக்கும் தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் நீர்வரத்து அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×